Saturday, March 23, 2013

போராடுவோம் !!!

உல்லாசம் தான்
வாழ்க்கை என்று நினைத்து நண்பருடன்,
இருபத்திமூன்று வயதில் பயணிக்கும்
ஒரு சாமானிய இளைஞன், பயணத்தின்
முடிவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக
குரல் எழுப்ப,
அது அவனது வாழ்வை மாற்றி அமைக்கிறது.
அதன் பின்னர் போராட்டமே வாழ்வு என
மாற, உலகின்
வல்லரசுகளை எதிர்த்து நின்று முழங்குகிறான்.
முப்பத்தியொன்பது வயதில்
ஒரு போராட்டத்தில் அமெரிக்க
கூட்டு படையால்
கொலை செய்யப்படுகிறான். உலகம் இந்த
இளைங்கனை மறந்துவிடும்
என்று உலகின் வல்லரசுகள் நினைக்க,
உலகில் எந்த மூலையில் மக்கள்
புரட்சி வெடித்தாலும் அங்கெல்லாம்
இவனது முகமே சர்வாதிகாரத்திற்கும்,
வல்லரசுகளின் கொட்டதிற்க்கும்,
முதலாளித்துவ சுரண்டலுக்கும் எதிரான
அடையாளமாக காட்டப்படுகிறது. அந்த
முகத்தின் பெயர் 'சே' என்று செல்லமாக
அழைக்கப்படும் எர்நெஸ்டொ 'சே'
குவேரா.

"எனது போராட்டத்தை யாரேனும்
தொடரும் நிலையில், நான்
வீழ்வதை பற்றி எனக்கு கவலையில்லை"
என்று முழங்கிய மாவீரனின்
வாக்குப்படி இன்றும் உலகில் ஏதேனும்
ஒரு மூலையில் மக்கள்
ஒடுக்குமுறைக்கு எதிராக
முழங்குகின்றனர். அக்டோபர் ஒன்பதாம்
திகதி உலகின் மாபெரும் போராளிகளில்
ஒருவரான சே குவேரா மறைந்த தினம்.

'அநீதிக்கு எதிராக உன் உள்ளம்
குமுறினால், நீயும் எனது சகப் போராளி'
என்றுரைத்த மக்களின்
போராளி சே குவேராவின்
சொல்படி ஒன்றிணைந்து போராடுவோம் !!!

வெற்றி அல்லது வீரமரணம்


நமது புரட்சிக்கான பயணம் எப்போதும் வெற்றியை நோக்கியே செல்ல வேண்டுமென நினைக்கிறோம். ஆனாலும் அடக்குமுறையால் ஒடுக்கப்படுமானால் வெற்றி கிடைக்காவிட்டாலும், மக்களின் உரிமைக்கான வெற்றிகளை நோக்கி செல்ல முடியாவிட்டாலும், எங்கள் முயற்சியில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

'வெற்றி அல்லது வீரமரணம்' என்பது புரட்சி பாதையில் செல்லும் தோழர்கள் சிந்தனையில் அழுத்தமான கொள்கையால் பதிவு செய்த உயிர்ச் சொல். அவை உயிரோட்டத்துடன் எங்கள் சிந்தனைகளில் வாழ்கிறது!

- தோழர்
சே குவேரா

Tuesday, August 10, 2010

புரட்சி

புரட்சி என்பது ஆப்பிள் பழமல்ல

பழுத்தவுடன் விழுவதற்கு

அதனை நீ விழ வை...

- சே குவேரா

Sunday, October 5, 2008

சேகுவேரா



அர்ஜென்டினா நாட்டில் ரோவேரியோ நகரில் தாய்வழி வசதி மிக்க குடும்பத்தில் சேகுவேரா 1928 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி பிறந்தார். அவரது தாயார் ஸெலியாவுக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே இருந்த நுரையீரல் பாதிப்பு சேகுவேராவைச் சின்னஞ்சிறு பருவத்திலேயே பற்றிக் கொண்டது. மகன் மீது எல்லையற்ற பாசம் கொண்ட அந்தத் தாய் ஸெலியா புற்றுநோயின் தாக்குதலுக்கு இருபது ஆண்டுகள் ஈடுகொடுத்தவர். மரணத்தோடு போராடிய கடைசி வாரங்களில் ''சே’’யின் தாய் என்பதாலேயே சிறையில் வாடினார். புரட்சி எரிமலையைக் கருவில் சுமந்த அந்த வீரத்தாய் மருத்துவமனை சிகிச்சையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பியூனஸ் அயர்சில் 1965இல் அந்தத் தீபம் அணைந்தது.

'சே’வுக்கு பள்ளி செல்ல, ஆடுகளத்தில் விளையாட ''ஆஸ்துமா’’ தடைக் கல்லாக ஆயிற்று. ஆயினும் அவரது அறிவுக் கூர்மை ஆறுவருட மருத்துவப் படிப்பை மூன்று ஆண்டுகளிலேயே ''டாக்டர் பட்டத்தை’’ ஈட்டித் தந்தது. தனது 23 ஆவது வயதில் வடக்கு அர்ஜென்டினா முழுக்க ஒரு சாதாரண மோட்டார் சைக்கிளில் 4,000 மைல்கள் பயணம் செய்வதர், 'லா பாட ரோஸா’ எனும் நார்ட்டன் இரக மோட்டார் சைக்கிளில் கடற்கரை, காடுமலை, புல்வெளிகள் வழியாகச் சிலி, பெரு, வெனிசூலா, கொலம்பியா, காரகாஸ், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் பயணித்தது மிக மிகச் சுவையான விறுவிறுப்பானச் அனுபவம் ஆகும்.

வறுமையில் வதங்கி ஆஸ்துமா, இருதயநோய்களுக்கு ஆளாகி, கவனிப்பார் இன்றி வேதனையில் துடிக்கும் ஒரு ஏழைப்பெண்ணின் அவலநிலைப் பற்றித் தன் நாட்குறிப்பில் ''கண்ணுக்குத் தென்படும் அடிவானமாக மறுநாளை மட்டுமே கொண்டுள்ள இந்த மக்களது வாழ்வில்தான் உலகத் தொழிலாளி வர்க்க வாழ்வின் ஆழமான அவலத்தை நம்மால் காண முடியும். செத்துக் கொண்டு இருக்கும். அந்தக் கண்களில் மன்னிப்பை இறைஞ்சும் தாழ்மையான வேண்டுகோள் தெரிகிறது. நம்மைச் சூழ்ந்து உள்ள மர்மத்தின் விரிந்த வானத்தில் இன்னும் சிறிது நேரத்தில் கரைந்துவிடப் போகின்ற அவர்களின் உடல்களைப் போலவே, ஆறுதலைக் கேட்டு அடிக்கடி மன்றாடும் பயனற்ற வேண்டுதல்களும் வெற்றிடத்தில் கரைந்து போய்விடுகின்றன’’ என்று உருக்கமாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் எதிர்கால யுத்தப் பயணத்துக்கு அவரது மனதை ஆயத்தப்படுத்தும் பயணமாக அமைந்தது. 1953 ஜூலை 7ஆம் நாள் அவரது தந்தையும் தாயும் நண்பர்களும் வழியனுப்பிட பொலிவியா நாட்டுக்குப் பயணம் ஆனார். (அதே பொலிவியாதான் அவருக்கு இறுதி பலிபீடம் ஆயிற்று).
திருப்புமுனை

பொலிவியா சென்ற 'சே’ மெக்சிகோவுக்குள் நுழைகிறார். வரலாற்றுத் திருப்பமான சந்திப்பு இங்கு நடக்கிறது. கியூபா நாட்டில் ஹவானாவில் மட்டுமே செல்வாக்குப் பெற்று இருந்த கம்யூனிஸ்ட் கட்சி 1944க்குப் பிறகு மக்கள் சோஷலிஸ்டுக் கட்சி அல்லது பி.எஸ்.பி. என்று அழைக்கப்பட்டது. இக்கட்சி 7 சதவீத வாக்குகளே பெற்றது. ஆயினும் உறுதியான தொண்டர்களால், போராளிகளால் செல்வாக்கும் தீர்மானிக்கும் சக்தியும் கொண்டதாய் இருந்தது.
கியூபாவைச் சர்வாதிகாரி ஃபல்ஜென்ஷயோ பாடிஸ்டா அடக்கி ஆண்ட காலம். அமெரிக்கப் பெரு முதலாளிகள் தங்கள் நிறுவனங்களால் கொள்ளையடித்துச் சுரண்டிக் கொழுத்த சூழல், விபச்சாரமும் கேளிக்கை விடுதிகளும் கியூபாவை ''அமெரிக்கர்களின் உற்சாகப் போக பூமி’’ ஆக்கி இருந்த நிலை. கியூபாவில் தனது வீராவேசமான பேச்சாலும் தனது வசீகரத் தன்மையாலும் ஆற்றல்மிக்க செயல்களாலும் மாணவப் பருவத்திலேயே புகழ் பெற்று இருந்த பிடல்காஸ்ட்ரோ. ஆர்தோடாக்சோ கட்சியின் வழக்கறிஞராக 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

வெகுண்டு எழுந்த பிடல் காஸ்ட்ரோ 150 பேரைத் திரட்டி ஆயுதங்கள் ஏந்தியவர்களாக 1953ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் நாள் சான்டியாகோவில் கிழக்குப் பகுதியில் இருந்த 'மான்கடா’ இராணுவத்தளத்தைத் தாக்கியபோது அத்தாக்குதல் முறியடிக்கப்பட்டு பிடல் காஸ்ட்ரோவும் கிளர்ச்சிக் காரர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ''மான்கடா’’ தாக்குதல் வழக்கில்தான் பிடல் காஸ்ட்ரோ தானே வாதாடினார். உலகப் புகழ் பெற்ற தனது உரையின் முடிவில் வரலாறு என்னை விடுவிக்கும் என முழங்கினர். 'பாடிஸ்டா’ சர்க்கார்’ 'பிடலை’ த்துச்சமாகக் கருதி விடுவித்தது. விசுவரூபம் எடுத்தார் பிடல்!

மெக்சிகோவில் - கியூபக் கிளர்ச்சி பற்றி அறிந்த சேகுவேரா, முதலில் ஃபிடலின் சகோதரர் - கியூபா வரலாற்றில் இன்றுவரை தனியிடம் பெற்று இருக்கிற ரால் காஸ்ட்ரோவைச் சந்தித்தார். அவர் மூலம் 1955ஆம் ஆண்டின் கோடை காலத்தில் பிடல் காஸ்ட்ரோவை எர்னஸ்டோ சேகுவேரா சந்தித்தார். ''ஒரு குளிர் கால இரவில் மெக்சிகோவில் நான் அவரைச் சந்தித்தேன். சில மணி நேரத்துக்குப் பிறகு முடிந்துவிட்ட இச்சந்திப்பில் என் எதிர்காலப் பயணத்தை முடிவு செய்தேன். ஒரு கொடுங்கோலனுக்கு எதிரான எந்தவொரு புரட்சியிலும் என்னை இணைத்துக் கொள்வது பற்றிப் பேசுவது கடினமாக இருக்கவில்லை. எனக்கு ஃபிடல் அசாதாரணமான மனிதராகக் காட்சி அளித்தார். மிகவும் சாத்தியமற்ற விஷயங்களை அவர் எதிர் கொண்டார். அவற்றிற்குத் தீர்வு கண்டார். அறிவுக் கூர்மைமிக்க இளைஞரும் தன்னம்பிக்கை மிக்க வரும் அசாத்தியமான துணிச்சல் நிறைந்தவரும் கியூபப் புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோவைச் சந்தித்தது, ஒரு அரசியல் நிகழ்ச்சி ஆயிற்று’’ என்று தனது பயணக்குறிப்புகளில் 'சே’ எழுதினார்.

கிரான்மா

மெக்சிகோவில் 'பிடல் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டபோது 'சே’ ''மார்க்சிய லெனினியமே தனது கருத்து இயல்’’ என்று கூறினார். கியூபா செல்வது என்றும் ஆயுதப் புரட்சியின் மூலம் 'பாடிஸ்டா’ வைத் தூக்கி எறிவது என்றும் முடிவு செய்யப்பட்டது. உலக வரலாற்றில் பெயரைப் பொறித்துக் கொண்ட 'கிரான்மா’ படகு அமெரிக்கர் ஒருவரிடம் இருந்து 15,000 அமெரிக்கா டாலர்களுக்கு விலைக்கு வாங்கப் பட்ட உல்லாசப் படகு ஆகும். 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அதிகாலையில் 'கிரான்மா’ புறப்பட்டது. இருபது பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய அப்படகில் எண்பத்து இரண்டு பேர் இருந்தனர். உணவு, குடிநீர், ஆயுதங்கள், தோட்டக்கள், இரண்டு டாங்கி எதிர்ப்புப் பீரங்கிகள், தொலைநோக்கிப் பொருத்தப்பட்ட முப்பத்து ஐந்து துப்பாக்கிகள் ஐம்பத்து ஐந்து மெக்சிகத் துப்பாக்கிகள் மூன்று நாம்சன் மெசின் கன்கள், நாற்பது இலகுரக இயந்திரக் கைத்துத் துப்பாக்கிகளையும் சுமந்து கொண்டு படகு நீரில் நீந்தியது. சேகுவேரா ஒரு மருத்துவ அதிகாரியாக லெப்டினைட் அந்தஸ்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டார். நீர்ச்சூழலில் கவிழ்ந்து அனைவரும் தண்ணீரில் மடிந்து இருப்பர். இயற்கை வேறு விதமாக முடிவெடுத்ததால் கரை சேர்ந்தது படகு. ஆனால் சதுப்பு நிலத்தில் சிக்கிச் சிதறினார்கள். இவர்களில் பலரும் அரசாங்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
களத்தில் 'சே’

சியாரா மாஸ்ட்ரா மலைகளில் தளம் அமைத்தனர் கொரில்லாக்கள், வீரகாவியமான போர்ப்பயணம் அது. நீண்ட களைப்பூட்டும் பயணங்களில் தனது ஆஸ்து மாவுடனும் போராடிக் கொண்டே 'சே’ போர்க்களங்களில் போராடினார். புரட்சியின் முதல் யுத்தம் 1956 டிசம்பர் 5ஆம் தேதி அமெக்ரியோ டிபியோவில் தொடங்கிய போது 'சே’யின் கழுத்துப் பகுதியில் இயந்திரத் துப்பாக்கிக் குண்டு பட்டு ஏராளமாக இரத்தம் கொட்டியது. மரணம் முதன் முதலாக 'சே’வை அணுகிச் சென்ற நிகழ்வு அதுதான். போர் புரிவதில் மட்டும் இன்றித் தனது படையிலும் எதிரிகள் படையிலும் காய முற்றவர்களுக்கு மருத்துவச் சேவை செய்வதில் 'சே’ மனித நேயராக விளங்கினார். பிரிதொரு சமயம் 'சே’வின் காலில் குண்டு பாய்ந்த போது ஃபிடல் காஸ்ட்ரோ அதிர்ச்சியுற்றுக் கோபித்தார். ''நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று தீவிரமாக எச்சரிக்கிறேன். நேரடியாகப் போர் புரியவேண்டாம் என்று நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன். வீரர்களை நன்றாக வழிநடத்தும் பொறுப்பை நிறைவேற்றுங்கள். இச்சமயத்தில் அதுதான் உங்களின் தலையாய பணி ஆகும்’’ என்று பிடல் வற்புறுத்திக் கூறினார். ஒருமுறை ''பிடல்’’ 'சே’விடம் ஏன் பழுதுபட்ட துப்பாக்கியை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட போது ''தரமான துப்பாக்கிகளை ஆரோக்கியமான வீரர்களுக்குத் தந்துவிட்டேன்.
தரமான துப்பாக்கிகள் திடகாத்திரமான போராளிகளிடம் விதையாக வேலை செய்யும். நான் உடல் நலம் பழுதுபட்டவன் தானே, எனவே எனக்கு பழுதான துப்பாக்கியே பொருத்தம் என்றார். படைவீரர்களின் உணவையே அவர்களுடன் வரிசையில் நின்று பெற்றுக் கொள்ளும் எளிமை அவருக்கு இயல்பானது.


“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்”